Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

சீனாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா உறுதி

சீனாவின் சவாலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா உறுதிபட தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள விமானப் படை தளத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தது. அப்போதே எதையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. இப்போது விமானப்படையின் பலம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவின் சவாலை எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் உள்ளோம். லடாக் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகள் குறைக்கப்படாது.

முப்படைகளின் ஒருங்கிணைந்தகட்டுப்பாட்டு மையத்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படையில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மிகவும் பழைமையான போர் விமானங்கள் படையில் இருந்து விலக்கப்படும். அதற்குப் பதிலாக புதிய போர் விமானங்கள் படையில் சேர்க்கப்படும். பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள், விமானப் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. வரும் 2022-ம் ஆண்டுக்குள் 36 ரஃபேல் போர் விமானங்களும் படையில் இணையும்.

உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை 4-ம் தலைமுறை போர் விமானங்கள் ஆகும். அடுத்து 5-ம் தலைமுறையைச் சேர்ந்த போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை டிஆர்டிஓ மேற்கொள்ளும்.

கரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் டேங்கர், சிலிண்டர்களை நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணியில் விமானப் படை உறுதுணையாக இருந்தது. கடந்த 2 மாதங்களில் விமானப் படை விமானங்கள் 3,800 மணி நேரம் பறந்து மக்களுக்கு சேவையாற்றின. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்படையின் துணைத் தலைவர் அசோக் குமார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இலங்கை திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய கடல் எல்லைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சீனாவுடன் பதற்றம் நிலவுவதால் அமெரிக்காவின் பிரிடேட்டர் வகை ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருகிறோம். எங்களது கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது.

பிரிடேட்டர் வகை விமானங்கள் 50,000 அடி உயரத்தில் 2,900 கி.மீ. தொலைவு வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிரி போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x