

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழுவின் 2 ஆண்டு காலம் நாளை 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையிலான கடைசிஅறங்காவலர் குழு கூட்டம் நேற்றுதிருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழுமலையானின் கோயில் நாடு முழுவதும் இருக்க வேண்டுமெனும் எண்ணத்தில் சமீபத்தில் காஷ்மீரில் ஏழுமலையான் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மேலும், மும்பை, வாரணாசி உட்பட பல நகரங்களில்நாடு முழுவதும் 500 ஏழுமலையான் கோயில்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கோர் கோமாதா திட்டம் தற்போது சுமார் 100 கோயில்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டத்தை அனைத்து முக்கிய கோயில்களிலும் அமல் படுத்துவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஏழுமலையானுக்கு முந்தைய காலத்தை போன்று இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டேநைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
நிரந்தர பணி
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் விரைவில் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவர். இது குறித்து 90 நாட்களுக்குள் அட்டவணை தயாரிக்கப்படும்.
திருமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பேட்டரி பஸ்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் வழங்கியதால், விரைவில் 100 பேட்டரி பஸ்கள் திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும். இதேபோன்று, தனியார் டாக்ஸிகளும் பேட்டரி வாகனங்களாக இயக்க வேண்டுமென்பதே எங்களது குறிக்கோள்.
ஆதலால், தேவைப்படுவோருக்கு வங்கி கடன் மூலம் பேட்டரிகார்கள் வழங்கும் திட்டம் அமல் படுத்தப்படும். ஆந்திராவில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், இனி தரிசன டோக்கனும் அதிகரிக்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார். இக்கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான உயர்அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.