Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் வன்முறை குறித்து விசாரிக்க குழு: மனித உரிமைகள் ஆணையத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறை தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். கடந்த மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்தது.

குறிப்பாக பாஜக.வுக்கு தேர்தலில் ஆதரவு திரட்டியவர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று பாஜக குற்றம் சாட்டியது. இதற்கிடையில், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் கண்டித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்கவன்முறை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், டீன்கள் என 600 பேர் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக விசாரிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் (பிஐஎல்) தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தால் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம்இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது தேர்தலுக்குப் பிறகுநடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் குழு அமைத்துவிசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மேற்கு வங்க மாநில சட்டச் சேவை ஆணைய உறுப்பினர் - செயலர், இந்தக் குழுவில்உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என்றும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்தஒருவரும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி யுள்ளனர். - பிடிஐ

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் மீண்டும் சந்திப்பு

மேற்கு வங்கத்தில் பல்வேறு விவகாரங்களில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்து ஆளுநர் தன்கர் கவலை தெரிவித்து வருகிறார். இந்த வன்முறைகள் குறித்து அவர் மத்திய அரசுக்கு ஏற்கெனவே அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன்கர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் இருந்து வருகிறார். அவர் இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பிரகலாத் சிங் படேல் உள்ளிட்டோரை சந்தித்தார். கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் தன்கர் சந்தித்தார். இந்த சந்திப்பில் மேற்கு வங்க சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் தன்கர் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைப்பதற்கான தருணம் இது. மேற்கு வங்க அதிகாரிகளும் காவல் துறையினரும் தங்கள் நடத்தை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாடு சுந்திரம் அடைந்த பிறகு, மிக மோசமான ‘தேர்தலுக்குப் பிந்தையை வன்முறை’ மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x