

"பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் நட்பு பாராட்டும் நீங்கள் நான் எனது பணிகளை செய்யவிடாமல் முடக்குவது ஏன்?" என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பேட்டியில் கேஜ்ரிவால் கூறியதாவது:
எனது அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. இது பிரதமர் மோடியின் உத்தரவின் பேரிலேயே நடந்தது. பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுகிறார். ஆனால், டெல்லி மாநில முதல்வர் பணியாற்றவிடாமல் முடக்குகிறார்.
எனவே அவரை ஒரு கோழை என்றும் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் அழைத்ததில் எவ்வித வருத்தமும் எனக்கு இல்லை.
டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கு பலனாக பாலியல் சலுகைகளை கோரியுள்ளனர். பத்திரிகை நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து தனது மகன் கிரிக்கெட் விளையாட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
ஆனால், டெல்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட தேர்வுப் பட்டியலில் அவரது மகனின் பெயர் இடம் பெறைல்லை. அடுத்த நாளே அவரது மனைவியின் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் "என் வீட்டுக்கு நீங்கள் வந்தால் உங்கள் மகன் தேர்வு செய்யப்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த பத்திரிகையாளர் என்னிடம் தெரிவித்தார்.
விசாரணைக் கமிஷன் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிறைய தரம் தாழ்ந்த செயற்பாடுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்துள்ளது. அருண் ஜேட்லி தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் இவை நடந்துள்ளன. ஆனால், ஜேட்லி குற்றத்தை மறைப்பதற்காக எனது அலுவலகத்தில் போலியாக ஒரு ரெய்டு நடத்தி டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளை அதிகாரிகள் படித்துச் சென்றுள்ளனர்.
பிரதமர் மோடியை நான் தவறான வார்த்தைகளால் விமர்சித்திருக்கலாம். ஆனால், நான் என் மனதில் பட்டதையே பேசியுள்ளேன். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.
இந்த வேளையில் மோடியிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானுடன் இணக்கமான சூழலையே நாங்களும் விரும்புகிறோம். எனவே அந்நாட்டுடன் நீங்கள் நட்பு பாராட்டுங்கள். ஆனால், என்னையும் என் பணி செய்ய விடுங்கள்"
எனவே டிடிசிஏ ஊழல் விசாரணையை முடக்கி ஜேட்லியை பாதுகாக்க வேண்டுமா அல்லது அவர் மீது விசாரனை நடத்தப்பட வேண்டுமா என்பதை பிரதமரே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.