

டெல்லியில் கரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது.
கரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் ஏற்பட்ட மருத்துவ நெருக்கடி உலகையே உலுக்கியது. அங்கு நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், டெல்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 135 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தொற்று பரவும் விகிதம் 0.18 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆறுதல் அளிக்கும் விஷயமாக, இன்றைய தினம் உயிர்ப்பலி 7 என்றளவுக்குக் குறைந்திருக்கிறது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கரோனா பலி மொத்த எண்ணிக்கை 24,907 என்றளவில் இருக்கிறது. டெல்லியில் மிக மோசமான உயிர்ப்பலி எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் பதிவானது. மே 3ம் தேதி ஒரே நாளில் 448 பேர் பலியானதே டெல்லி கண்ட உச்சபட்ச கொடூரம்.
டெல்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை:
இரண்டாம் அலையிலிருந்து தேசம் மெள்ள மெள்ள விலகிவந்தாலும் கூட மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரித்திருப்பது கவனிக்கத்தக்கது. "இந்தியா இரண்டாவது அலையில் திக்கித் திணறி மீண்டு கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்" என அவர் கூறியிருக்கிறார்.