Published : 19 Jun 2021 05:15 AM
Last Updated : 19 Jun 2021 05:15 AM

கரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத்தில் இருந்து மீள ரூ.3 லட்சம் கோடி ஊக்க சலுகை அவசியம்: மத்திய அரசுக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு பரிந்துரை

கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தாக்கத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்க ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு ஊக்க சலுகைகளை அளிக்க வேண்டும் என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியும் கடன் வழங்கும் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மக்களின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஜன்தன் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்கு அளிக்கலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும்.

கடந்த ஆண்டைப் போல அரசு ஊழியர்களுக்கு விடுப்புடன் கூடிய ரொக்க சலுகை (எல்டிசி) வவுச்சர்களை அளிக்கலாம்.

அவசர காலகடன் உதவி சலுகையை ரூ. 5 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும். இந்த கால அளவை மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. அதேபோல எரிபொருள் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கலாம் எனவும் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

சிஐஐ நடத்திய கருத்துக் கணிப்பில் 51 சதவீத உறுப்பினர்கள் தங்கள் நிறுவனம் இரண்டாவது அலையில் வெகுவாக
பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஊழியர்களில் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவ செலவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இலக்கை எட்டவேண்டுமெனில் இரண்டாவது அரையாண்டில் பொருளாதார மீட்சி நிச்சயம் ஏற்பட வேண்டும் என்றும் சிஐஐ குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டின் நிதி பற்றாக்குறை 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் 1.3 சதவீத அளவுக்கு ஊக்க சலுகைகளை அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த அளவானது ரூ. 3 லட்சம் கோடியாக இருக்கும் என்று சிஐஐ தலைவர் டி.வி. நரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு 71.2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். தற்போது போடப்படும் தடுப்பூசி அளவைக் காட்டிலும் இது இரு மடங்காகும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x