

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதலான நிலங்கள்அந்நகரின் பல பகுதியில் வாங்கப்படுகிறது. இப்பணியை கோயில் கட்டு வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
இதில் கடந்த மார்ச் 18-ல் வாங்கப்பட்ட 1,208 ஹெக்டேர் நிலம் மீது ஊழல் புகார் எழுந்திருந்தது. ரூ.2 கோடிக்கு பெறப்பட்ட நிலத்தை அடுத்த சில நிமிடங்களில் அறக்கட்டளையினர் ரூ.18.5 கோடி விலையில் வாங்கியதாகப் புகார் எழுந்தது. இதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் ஆதாரங்க ளுடன் மறுப்பும் அளித்திருந்தனர்.
இதுபோன்ற புகார்கள் வராமல் இருக்க வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றி நடைபெறும் கட்டுமானப் பணிக் காக ஒரு குழு அமைத்திருந்தனர். இதில், அரசு சார்பிலும் பலர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதனால் வாரணாசியின் கட்டுமானப் பணிகள் வெளிப்படையாகவும், புகார் இல்லாமலும் நடந்தது.
அதேபோல் அயோத்தியிலும் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்ம பூமி அறக்கட்டளை யினர் ஆலோசனை செய்து வருகின்றனர். வாரணாசியை போன்ற ஒரு குழு அயோத்தியிலும் அமைக்கப்பட்டால் அதன் பரிந்துரையின் பேரில் மட்டுமே இனி நிலம் விலைக்கு பெறப்படும் எனக் கருதப்படுகிறது.
இத்திட்டத்துக்கு அறக் கட்டளையை மேற்பார்வையிடும் பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பக் ராயை சுற்றி நிலத்தரகர்கள் வட்டமிடுவது அதிகரித்துள்ளது. இவர்கள், ராமஜென்ம பூமிக்கு பின்புறமுள்ள கட்ரா எனும் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் நிலங்களை அறக்கட்டளைக்கு விற்க முயற்சிக் கின்றனர்.
சாதுக்கள் முயற்சி
நிலப்பேர ஊழல் எழுந்தபோது, அயோத்தியிலுள்ள பல்வேறு மடங்களின் சாதுக்களில் அதிருப்தி ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியிலும் சில முக்கிய சாதுக்கள் இறங்கியுள்ளனர். விஷ்வ இந்து பரிஷத்திற்கு எதிரானக் கருத்துக்களை கொண்ட இவர்கள் வாரணாசி, அலகாபாத் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வர இருப்பதாகத் தெரிகிறது.