Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

சுவேந்து அதிகாரியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு மீது ஜூன் 24-ல் விசாரணை

கொல்கத்தா

மேற்கு வங்க தேர்தலில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அறுதி பெரும்பான்மையை பெற்ற திரிணமூல் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், நந்திகிராம் தொகுதி யில் பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்றவர் ஆவார். எனவே, இந்த தேர்தலானது மம்தா பானர்ஜிக்கு மிகவும் சவாலாக இருக்கும் என ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அதன்படியே நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நந்திராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். 1951-ம் ஆண்டுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவானது இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்த மனுவானது, கொல் கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கவுசிக் சண்டா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இது தேர்தல் தொடர்பான மனு என்பதால் முதல் நாள் விசாரணையில் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்’’ என நீதிபதி கூறினார். இதனை மம்தாவின் வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x