

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பதற்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில், அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக எழுந்துள்ள டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் மற்றும் கடந்த வாரம் டெல்லி தலைமை செயலகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.