

கரோனா தடுப்பூசிகள், தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
''கரோனா முன்களப் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரோனா தடுப்பூசிகள், தொற்றாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 80% வரை குறைக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆக்சிஜன் தேவை 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டியது 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல மே 7-ம் தேதி உச்சபட்சமாக இருந்த தினசரி புதிய தொற்று எண்ணிக்கை, 85 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது. மே 10-ம் தேதி உச்சபட்சமாக இருந்த மொத்த கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 78.6 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது.
வாராவாரம் தொற்று உறுதியாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் 30 - மே 6 வரையில் 21.6 சதவீதமாக இருந்தது.
நாடு முழுவதும் 513 மாவட்டங்கள் 5 சதவீதத்துக்கும் குறைவான கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதத்தைக் கொண்டுள்ளன''.
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.