Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

கரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு: ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் கணிப்பு

கரோனா 2-வது அலையின் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ்பரவலின் 2-வது அலை பாதிப்புசிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தீவிரமாக அதிகரித்தது. இதன்காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் உள்நாட்டு தேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என ஜூன் மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை, இந்திய வளர்ச்சியின் போக்கு, மற்றும் நாட்டின் நிதிநிலை கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து கரோனா பாதிப்புடன்போராடி வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடனான நம்பிக்கைக்குத் திரும்பியிருந்தாலும் உள்நாட்டு தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியின் பாதையில் உள்ளன. மேலும் தொழில் துறை உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக செயலாற்றுகின்றன.

தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி போடப்படும் வேகம் அதிகரிப்பது ஒன்றே தீர்வு. தற்போது பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள், தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் திறன் இந்தியப் பொருளாதாரத்துக்கு உள்ளது.

கரோனா பாதிப்பு இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளின் அரசுகளையும் அவற்றின் நிதிக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய நிதி கட்டமைப்பை ஊக்குவிக்க அரசு நிதி தொகுப்பை வெளியிட்டது. மேலும் நிதி நிலையைச் சரி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைவிடவும், எப்படி திட்டமிடப்பட்டுள்ளது என்பதை கவனிப்பது அவசியம். மூலதன ஒதுக்கீடு மற்றும் வருவாய் செலவினம் இடையிலான விகிதம் மற்றும் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க முடியும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x