

கரோனா பரவலைக் காரணம் காட்டிசிறையில் இருக்கும் நபர்களின் ஜாமீன் மனுக்களை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது, அந்த நபரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமையை மீறுவதற்கு சமம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா பரவலைக் காரணம் காட்டி பஞ்சாப் மற்றும் ஹரியாணாநீதிமன்றம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு ஏற்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த்குப்தா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப் - ஹரியாணா நீதிமன்றம், ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு ஏற்காதது அதிர்ச்சியளிக்கிறது. தொற்று காலங்களில் அனைத்து நீதிமன்றங்களும், அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றுதகுந்த உத்தரவை அவ்வப்போது வழங்கி வருகின்றன. ஆனால் பஞ்சாப் – ஹரியாணா உயர் நீதிமன்றம், கரோனா பரவலைக் காரணம் காட்டி ஜாமீன் மனுக்களை விசாரிக்காதது, சிறையில் இருக்கும் நபரின்சுதந்திரம் மற்றும் உரிமையை மீறுவதற்குச் சமம்.
தற்போதுள்ள கடினமான காலகட்டத்தில் குற்றவியல் நடைமுறைசட்டம் பிரிவு 439 பிரகாரம், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படாவிட்டால் அது நீதித் துறையின் நிர்வாகத் தோல்வியை பிரதிபலித்துவிடும்.
தொற்று பரவலின்போதுதான் இதுபோன்ற வழக்குகளில் சரியான நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். அனைத்து நீதிபதிகளையும் ஒரேநேரத்தில் பணியமர்த்த முடியாவிட்டாலும்கூட ஒருநாள் வி்ட்டு ஒருநாள்என்ற அடிப்படையில் நீதிபதிகளை பணியமர்த்தி, சட்டத்தின் உதவியைஎதிர்பார்த்து, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும்.
பல்வேறு வழக்குகளில் கைதாகிசிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கோர முழு உரிமை உண்டு. அந்த உரிமையைக் கரோனாவைக் காரணம் காட்டி மறுக்க முடியாது. எனவே பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஜாமீன் கோரும் மனுக்களை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா முகைதீன் கிஸ்தி கூறும்போது, ‘‘பொதுவாக ஜாமீன், முன்ஜாமீன் கோரும் மனுக்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து தினந்தோறும் என்ற அடிப்படையில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறுவழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசியலமைப்பு சட்டமும் அதைத்தான் கூறுகிறது.
ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களில் காலம் தாழ்த்தினால் அது பாதிப்புக்குள்ளான நபரின் தனிப்பட்ட வாழ்க்கையையே வெகுவாகபாதித்து விடும். பஞ்சாப் – ஹரியாணா உயர் நீதிமன்றத்தில்தான் ஜாமீன் மனுக்கள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிலை கிடை யாது.
தொற்றுக் காலங்களிலும்கூட தனிப்பட்ட நபர்களின் உரிமையை, அடிப்படை சுதந்திரத்தை நீதிமன்றங்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இந்த வழக்கின் மூலம் உறுதி செய்துள்ளனர்’’ என்றார்.