

கரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் உட்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கம் முதலாக கரோனா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் முதன்முதலாக நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், சிறு சிறு தளர்வுகளுடன் இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொற்று பாதிப்பு குறைந்ததால் பொதுமுடக்கம் முற்றிலு மாக அகற்றப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், நடப்பாண்டு பிப்ரவரி முதல் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுத்த தொடங்கியது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்கத்தால் அரசு அலுவலகங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களுடனே செயல்படுகின்றன. இதனால், ஆவணங்களை புதுப்பித்தல் போன்ற செயல்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன.
இதுபோன்ற சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்று வைத்திருப்பதற்காக பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பரவலால் எழுந்துள்ள கடினமான காலக்கட்டத்தை கருத்தில்கொண்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், வாகனத் தர சான்றிதழ், வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் என அனைத்துக்குமான செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதிக்கு பிறகு காலாவதியான மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தும், வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும். எனவே, குறிப்பிட்ட தேதிக்கு பிறகு காலாவதியாகிய வாகனச் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அபராதம் விதித்தல் போன்ற எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.