Last Updated : 01 Dec, 2015 09:35 AM

 

Published : 01 Dec 2015 09:35 AM
Last Updated : 01 Dec 2015 09:35 AM

பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பே கவுடாவுக்கு நினைவிடம்: கர்நாடக அரசியல் தலைவர்கள் வேண்டுகோள்

கெம்பே கவுடா (1510-1569) என்ற குறுநில மன்னரால் தற்போதைய பெங்களூரு நகரம் கிபி 1537-ம் ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முரசு ஒக்கல் பரம்பரையை சேர்ந்த இவரது மூதாதையர்கள் 14-ம் நூற்றாண்டில் பெங்களூரு அருகேயுள்ள எலஹங்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

கெம்பே கவுடா பெங்களூருவை நிறுவி 400 ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அவர் தொடர்பான உறுதியான வரலாறு இதுவரை எழுதப்படவில்லை. குறிப்பாக அவரது இறுதி காலக்கட்டம், கெம்பே கவுடா எவ்வாறு இறந்தார், எங்கு இறந்தார் என்ற குறிப்புகள் எதுவும் கர்நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வில்லை. இந்நிலையில் கெம்பே கவுடாவின் சமாதி பெங்களூருவை அடுத்துள்ள மாகடி வட்டத்தில் உள்ள கெம்பா புரா கிராம‌த்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோழர்கள் கட்டிடக் கலையின்படி கோபுரமாக கட்டப்பட்டுள்ள சமாதியின் கீழே உள்ள கல்வெட்டில், ''கெம்பே கவுடா ஐயா'' என கன்னடத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான‌ தேவகவுடா, மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, கெம்பே கவுடா நினைவு அறக்கட்டளையின் தலைவர் பசவராஜ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இது தொடர்பாக தேவகவுடா கூறும் போது, “கெம்பே கவுடாவுக்கு சிலை அமைத்து, நிரந்தமாக அருங்காட்சி யகம் அமைக்க வேண்டும்” என்றார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறும்போது, “கெம்பே கவுடாவின் சமாதி குறித்து ஆய்வு செய்து 2 மாதத்துக்குள் அறிக்கை தருமாறு மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினை விடத்தைப் போல கெம்பே கவுடாவுக்கு நினைவிடத்தை கர்நாடக அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

கெம்பே கவுடாவுக்கு நினைவிடம் அமைக்க கர்நாடக தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பின் நிறுவனர் புலவர் மகிபை பாவிசைக்கோவும் வரவேற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x