

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவிக்கப்பட்ட இரு நக்ஸல்கள் உட்பட 19 நக்ஸல்கள் நேற்று போலீஸாரிடம் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வன்முறை பாதையில் இருந்து பொதுவாழ்வுக்கு திரும்பும் நக்ஸல்களை மாநில அரசு வரவேற்று தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொதுவாழ்வுக்கு திரும்பும் நக்ஸல்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொண்டாகான் மாவட்டத்தில் பல்வேறு நக்ஸல் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 19 பேர் நேற்று மாவட்ட எஸ்பி வாட்டி முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஹேம்சந்த் மாண்டவி என்கிற பல்லு (35) மற்றும் ஜெய்ராம் கோரம் (36) இருவரும் சரணடைந்துள்ளனர். இவர்களை பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு முறையே ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களாகவே முன்வந்து சரணடைந்திருப்பது போலீஸாரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.