

நேபாளத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 7 பேருக்கு ஹரியாணா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண், தன் சகோதரியுடன் ஹரியாணா மாநிலம் ரோதக்கில் உள்ள சின்யாத் காலனியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி, 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது சகோதரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இந்த சூழலில் பிப்ரவரி 4-ம் தேதி பாஹு அக்பர்பூர் என்ற கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த இளம் பெண்ணை, மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்புகளில் கூரான கற்களை கொண்டு கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ரோதக் மாவட்டம் கடிகேரி கிராமத்தை சேர்ந்த 9 பேர் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களில் 8 பேரை போலீஸார் கைது செய்து ரோதக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளி சிறார் என்பதால், அவர் மீதான வழக்கு மட்டும் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மற்றொரு குற்றவாளி கைது நடவடிக்கைக்கு பயந்து டெல்லியில் தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில், குடிபோதையில் இருந்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 9 பேரும் கும்பலமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. பாலியல் பலாத்காரத்துக்கு பின் மயங்கி விழுந்த அந்த பெண்ணின் மர்ம உறுப்புகளை கற்களால் தாக்கியும், உறுப்புக்குள் கூரான கற்களை திணித்தும் மிக கொடூரமான முறையில் சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர்.
இதையடுத்து மனிதாபிமானமற்ற முறையில் கொடூர செயலில் ஈடுபட்ட அந்த குற்றவாளிகள் 7 பேருக்கும் ரோதக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், தீர்ப்பு வழங்கும்போது, மிக அரிதான வழக்கு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.