90 நிமிட பயணத்துக்கு அசைவ உணவை நிறுத்த ஏர் இந்தியா நிறுவனம் முடிவு?

90 நிமிட பயணத்துக்கு அசைவ உணவை நிறுத்த ஏர் இந்தியா நிறுவனம் முடிவு?
Updated on
1 min read

ஏர் இந்தியா நிறுவனம் குறைவான பயண நேரத்தைக் கொண்ட பயணத்தின் போது பொது பிரிவு பயணிகளுக்கு அசைவ உணவு விநியோகிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல மதிய உணவு மற்றும் இரவு உணவுடன் காபி, டீ அளிப்பதை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இது புத்தாண்டு (ஜனவரி 1) முதல் அமலுக்கு வரும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உறுதியான அறிக்கை வெளியிடப்படவில்லை.

தற்போது ஏர் இந்தியா விமானத்தில் சைவ மற்றும் அசைவ சாண்ட்விச் மற்றும் கேக்குகள் பயணிகளுக்குத் தரப்படுகின்றன. 90 நிமிட பயணமாக இருந்தாலும் இது அளிக்கப்படுகிறது. இதன்படி ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேர பயண விமானங்களில் சைவ உணவுகள் சூடாக அளிக்கப்படும். பெரும்பாலும் பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் இயக்கப்படும் விமானங்கள் ஒன்றரை மணி நேரத்துக்கும் குறைவான பயண நேரத்தைக் கொண்டவையாகும்.

உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் உணவு வழங்குவதில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பாக அதுகுறித்து பயணிகளிடம் கருத்து கேட்டு அதன்பிறகு மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் ஏர் இந்தியா நிர்வாகம் தடாலடியாக பயணிகளிடம் கருத்து கேட்காமல் இத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளது என்று விமானத் துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தற்போது 90 நிமிடத்துக்கும் குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் குளிர்ச்சியான சைவ நொறுக்குத் தீனிகள்தான் வழங்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக சூடான சைவ உணவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே அசைவ உணவு வழங்குவதை கைவிடும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அசைவ உணவு அளிப்பதைக் கைவிடவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிசம்பர் 23-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் மதிய உணவு மற்றும் இரவு உணவின்போது காபி, டீ அளிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

அதேபோல 90 நிமிடத்துக்கு மேலான பயண நேரம் கொண்ட விமானங்களில் சூடான சைவ, அசைவ உணவு அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட பயண நேரம் கொண்ட விமானங்களில் வழக்கமான சைவ, அசைவ உணவுகள் வழங்கப்படும். இவை சூடாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, ஏர் இந்தியா விமானங்களில் முந்தைய உணவு விநியோக முறையே தொடரும் என்று தெரிவித்துள்ளார். அசைவ உணவு நிறுத்தப்படுமா என்பது குறித்து அவர் திட்டவட்டமாக கருத்து தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in