

சகிப்பின்மை குறித்த விவாதம் இன்று (செவ்வாய்) மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட வேண்டாம்’ என்று பாஜக எம்.பி.க்களுகு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி நோக்கிய பாதைக்கு இக்கருத்துகள் இடையூறு விளைவிப்பதாக பாஜக எம்.பி.க்களிடத்தில் சர்ச்சைக் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நக்வி.
மாநிலங்களவை விவாதத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. தியாகி, சபாநாயகர் மற்றும் முதல்வர் பதவிகளுக்கு முஸ்லிம்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவதில்லை என்ற கருத்த முன்வைத்தார்.
மேலும், அவர் கூறும்போது, “மகேஷ் சர்மாவுக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிக்க முடிந்த பிரதமருக்கு தாத்ரி சம்பவம் பற்றி பேச நேரமில்லை” என்று சாடினார்.
மேலும் அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்ற ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் கூறும்போது, “அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேற மறுத்திருக்கலாம், ஆனால் அவர் மதத்தையே துறந்து பவுத்தத்தைத் தழுவினார்” என்றார்.