Published : 17 Jun 2021 12:25 PM
Last Updated : 17 Jun 2021 12:25 PM

ராமர்கோயில் நில மோசடி; கடவுள்  பெயரில் ஊழல்:பிரியங்கா விமர்சனம்

புதுடெல்லி

அயோத்தியில் அதிக விலைக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் நடப்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் ஊழல் புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச்சில் ரூ.2 கோடி விலையில் பெறப்பட்ட 1.208 ஹெக்டேர் நிலம், அடுத்த சில நிமிடங்களில் அறக்கட்டளைக்கு ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சார்பில் விரிவான அறிக்கைவெளியிடப்பட்டது. அதில் 2019-ல் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தமிட்டு 2021-ல் ரூ.18.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இல்லை எனவும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விளக்கம் அளித்து இருந்தது.

இந்தநிலையில் அயோத்தியில் அதிக விலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான ஊழல் புகார் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார். பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் 18-ம் தேதி அயோத்தியில் ஒரு நிலத்தை 2 பேர் ரூ.2 கோடிக்கு வாங்கினர். அடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியது. அதாவது சில நிமிடங்களில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

2 பத்திர பதிவுகளிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்கள் ஒரே நபர்கள்தான். விலை ஏறி விட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை கூறுகிறது. இதை யாராவது நம்ப முடியுமா. அந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ.5 கோடிதான் இருக்கும். கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் செய்வது கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த நில ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x