

மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்தி சுமார் ரூ.5 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மும்பையின் மேற்கு காண்டிவலி பகுதியில் ‘ஹிராநந்தானி ஹெரிட்டேஜ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குபிரபல தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, கடந்த 30-ம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் குடியிருப்பில் வசிக்கும் 390 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நபருக்கு ரூ.1,260 வீதம் சுமார் ரூ.5 லட்சம் வசூலித்துக் கொண்டு தடுப்பூசி குழு சென்றுவிட்டது.
இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்து அரசின் கோ-வின் இணையதளத்தில் எந்தப் பதிவும் இல்லை என பின்னர் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை தொடர்பு கொண்டபோது தாங்கள் தடுப்பூசி முகாம் எதையும் நடத்தவில்லை என அவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குடியிருப்புவாசிகள் காண்டிவலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப் படையில், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காண்டிவலி போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தடுப்பூசிக்கு பதிலாக தங்களுக்கு என்ன மருந்து செலுத்தப்பட்டது, அதனால் என்ன பாதிப்பு வருமோ என குடியிருப்புவாசிகள் கவலை அடைந்துள்ளனர். - பிடிஐ