

ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று காணொலி முறையில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
உலக நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச் சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளது. தீவிரவாதமும், தீவிரமயமாக்கலும் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக பார்க்கப்படுகின்றன.
இந்தப் பிரச்சினையை உலக நாடுகள் ஒருங்கிணைந்து சமாளிக்க வேண்டும். தீவிர வாதத்தை எதிர்த்துப் போரிட்டு அதை அறவே ஒழிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீதும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பவர்கள் மீதும், தீவிர வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (தீவிரவாதத்துக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக சூசகமாக அப்போது அவர் தெரிவித்தார்). இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.
மேலும் அவர் பேசும்போது, "நிதி செயல்பாட்டு பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) அமைப்பின் உறுப்பினராக இந்தியா உள்ளது. இந்த அமைப்பின் மூலம் தீவிரவாதத்துக்கு நிதியளித்து ஊக்கப்படுத்துபவர்களை எதிர்த்து இந்தியா போராடும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்தியா செயல் பட்டு வருகிறது’’ என்றார்.-பிடிஐ