

கரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் இன்னும் ஓயவில்லை. இந்த தொற்றால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான அளவு மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் மருத்துவர்களின் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்று 2-வது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.
கரோனா தொற்றின் 3-வது அலையும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்கவும், 3-வது அலை உச்சகட்டத்தை அடையாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவல கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு (மருத்துவம் சாராத சுகாதார ஊழியர்கள்) இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி, கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6 வகை பயிற்சிகள் இதில் அடங்கும். இதன் மூலம் சுமார் நாடு முழுவதும் ஒரு லட்சம் கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களின் திறன்கள் மேம்படும். ரூ.276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நாளை தொடங்கி வைக்கவுள்ளார். அதன்பின் பயிற்சிகள் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ