

கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசி மருந்தை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்தில் கன்றுக் குட்டிகளின் ரத்த நிணநீர் உள்ளதா என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் பாந்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பான ஆவணத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று கூறியதாவது:
தடுப்பூசி மருந்து உற்பத்தி நடைமுறையில் கன்றுகளின் ரத்த நிணநீர் பயன்பாடு உள்ளது. ஆனால் இறுதிக்கட்ட தடுப்பூசி மருந்தில் கன்றுகளின் ரத்த நிணநீர் இல்லை.
வெரோ செல்களை உற்பத்தி செய்வதில் மட்டுமே கன்றுகளின் ரத்த நிணநீர் பயன்பாடு உள்ளது. வெரோ செல்கள் உற்பத்தி செய்வதில் இது ஒரு நிலையான நடைமுறையாகும். இந்த நடைமுறை உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகிறது. போலியோ, ரேபிஸ் மற்றும் இன்ஃபுளுயன்சா தடுப்பூசி தயாரிப்பிலும் இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
வெரோ செல்கள் வளர்ச்சியில் நிலையான ஊக்குவிப்பான கன்றுகளின் ரத்த நிணநீர் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வெரோ செல்கள் வளர்ச்சிக்குப் பிறகு அதில் உள்ள ரத்த நிணநீர் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. எனவே இறுதியாக தயாரித்து வெளியாகும் தடுப்பூசி மருந்தில் கன்றுகளின் ரத்த நிணநீர் பயன் பாடு இல்லை. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.