

எதிர்க்கட்சியினரின் நாடாளுமன்ற முடக்கம் தொடர்ந்து வரும் நிலையில் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடர் முழுதுமே முடங்கிவிடலாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அச்சம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடர் செயல்படவில்லை. தற்போது நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரும் முழுதும் செயல்படாமல் போகுமாறு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. நடப்பு கூட்டத்தொடர் முழுதும் முடக்கப்படுவதற்கான காரணங்கள் மணிக்கொரு தரம் மாறிக் கொண்டேயிருக்கிறது.
பொது விவகாரங்களை விவாதிக்கவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜிஎஸ்டி சட்ட மசோதாவுக்காகவும் நாடு காத்துக் கிடக்கிறது. இவையனைத்தும் காலவரையின்றி தாமதமாகி வருகிறது. இது குறித்து நம்மை நோக்கியே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: நாம் நமக்கும் இந்த நாட்டுக்கும் நியாயமாக நடந்து கொள்கிறோமா? என்பதே.
மார்ச் 28, 1957-ல் இது பற்றி ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அதில் அவர் பேசும்போது, ‘இந்தியாவின் இறையாண்மை அதிகாரம் படைத்த நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம், நாம் இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்புடையவர்கள் ஆகிறோம். இந்த நாட்டில் வாழும் பெரிய அளவிலான மக்கள் திரளின் வாழ்க்கைக்கு பொறுப்பாக இருக்கும் இந்த இறையாண்மை அமைப்பில் உறுப்பினர்களாக நாம் அமர்ந்திருக்கிறோம் என்பதை விட சிறப்பான உரிமையோ, பொறுப்போ நமக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
எனவே, நாம் அனைவரும் இந்த நாட்டுக்கான, இந்த நாடு நமக்கு அழைப்பு விடுத்திருக்கும் கடமை உணர்வு மற்றும் பொறுப்பை எப்போதுமில்லாவிட்டாலும் அவ்வப்போது கட்டாயம் உணர்ந்திருப்போம். இதற்கு நாம் தகுதிதானா இல்லையா என்பது அடுத்த விஷயம்.
இந்த 5 ஆண்டுகள் நாம் வரலாற்றின் விளிம்பில் மட்டுமல்லாது, வரலாற்றை உருவாக்கும் நடைமுறைகளிலும் சில வேளைகளில் மூழ்கியிருந்தோம்’ என்று நேரு அன்று பேசியதை நான் இங்கு மேற்கோள் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் மரபில் வருபவர்கள் என்று முன்னுரிமை கோரிக் கொள்பவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி: என்ன மாதிரியான வரலாற்றை அவர்கள் உருவாக்குகிறார்கள்? என்பதையே."
இவ்வாறு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அருண் ஜேட்லி.