‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’  - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் ஆவேசம்

‘‘நான் அநாதை அல்ல. சட்டப்படி சந்திப்பேன்’’  - தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் ஆவேசம்
Updated on
2 min read

எனது தந்தை இறந்திருக்கலாம், ஆனால் நான் யாரும் இல்லாத அநாதை அல்ல. நான் சிங்கத்தின் மகன், சட்டப்படி சந்திப்பேன் என கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் ஆவேசமாக கூறியுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.

பிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.

எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளனர். மொத்ததமுள்ள 6 எம்.பி.க்களில் 5 பேர் சிராக் பாஸ்வான் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் 5 பேரும் அண்மையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினர். பசுபதி குமார் பராஸை சமாதானம் செய்யும் சிராக் பாஸ்வானின் முயற்சி பலனளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து செயற்குழுவில் சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். சிராக் பாஸ்வான் கட்சியில் மூன்று பதவிகளை வைத்திருந்ததாகவும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கட்சியின் செயல் தலைவராக சுராஜ் பான் செயல்படுவார் என்றும், விரைவில் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட ஐந்து எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்குவதாகப் சிராக் பாஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார் .

இதனைத் தொடர்ந்து சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்தும் சிலருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற சலசலப்புக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இதுபோன்ற துரோகிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம்.

பசுபதி குமார் பிராஸை நான் நாடளுமன்ற கட்சித் தலைவராக்கினேன். அவருக்கு உரிய மரியாதை அளித்தேன். ஆனால் அவர் எனக்கு பதிலுக்கு இதனை செய்துள்ளார். எனது தந்தை இறந்திருக்கலாம், ஆனால் நான் யாரும் இல்லாத அநாதை அல்ல. நான் சிங்கத்தின் மகன். சட்டப்படி சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in