

அதிருப்தியில் உள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை சேர்த்தால் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டு விடும் என மாயாவதி எச்சரித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 12 எம்எல்ஏக்களை அக்கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியுள்ளார்.
இவர்களில் பகுஜன் சமாஜின் சட்டப்பேரவைக் கட்சித் லால்ஜி வர்மாவும் ஒருவர். அக்கட்சியில் மாயாவதி ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது 7 மட்டுமே உள்ளனர். லால்ஜி தலைமையிலான 12 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களை தனி குழு அல்லது கட்சியாக கருதுமாறு கோரி கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்தநிலையில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 9 பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் இவர்கள் சமாஜ்வாதியில் இணையலாம் என கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு மாயாவதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்து மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி கூறியுள்ளதாவது:
பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக அக்கட்சி திட்டமிட்டு தகவல் பரப்பி வருகிறது. எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களை நாங்கள் நீண்டகாலத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்துள்ளோம்.
மாநிலங்களவைத் தேர்தலில் தலித் தலைவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி செய்த சதிக்கு உடன்பட்டு வாக்களித்ததால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மீது சமாஜ்வாதி கட்சிக்கு கொஞ்சமாவது கரிசனம் இருந்திருக்குமானால் அவர்களை தனியாக அவஸ்தைபட விட்டிருக்காது. அவர்களுக்கு தெரியும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தால் தங்கள் கட்சி பிளவு பட்டு விடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.