இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு ரத்து

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு ரத்து
Updated on
1 min read

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே இந்திய கடல்எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி 15-ம் தேதிவிசைப்படகில் 11 இந்திய மீனவர்கள், மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 'என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலிய சரக்கு கப்பல் அந்த வழியாக சென்றது. அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படையைச் சேர்ந்தமசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர், கடற்கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய மீனவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந்தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த 2013-ம் ஆண்டில் அவர்கள் இத்தாலி திரும்பினர். இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், "இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கை இத்தாலி நீதிமன்றத்தில் நடத்தலாம்" என்று உத்தரவிட்டது.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் 8 மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு ஏற்கெனவே ரூ.2.17 கோடி இழப்பீடு வழங்கியுள்ள நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இந்த தகவலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுதெரிவித்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றது.

இதன்படி இத்தாலி அரசு சார்பில் உச்ச நீதிமன்ற வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. சர்வதேச நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் மீதான வழக்கு இத்தாலி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும். இத்தாலி அரசு வழங்கிய ரூ.10 கோடி இழப்பீடு, கேரள உயர் நீதிமன்ற வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.

கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு நீதிபதியை நியமனம் செய்து, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். எந்த வகையில் இழப்பீடு வழங்குவது என்பதை கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in