Last Updated : 16 Jun, 2021 03:12 AM

 

Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

2019-ல் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தமிட்டு 2021-ல் ரூ.18.5 கோடிக்கு விற்பனை; ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இல்லை: ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆதாரத்துடன் விளக்கம்

சுல்தான் அன்சாரி

புதுடெல்லி

ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என்று ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் ஊழல் புகார் எழுந்துள்ளது. கடந்த மார்ச்சில் ரூ.2 கோடி விலையில் பெறப்பட்ட 1.208 ஹெக்டேர் நிலம், அடுத்த சில நிமிடங்களில் அறக்கட்டளைக்கு ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ராம ராஜ்ஜியத்தில் நியாயம், சத்யம், தர்மம் இருந்தது. அவரது பெயரிலான ஊழல், அதர்மம் ஆகும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ராம ராஜ்ஜியத்தை பாஜக ஏமாற்றிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி அமர்த்திய ராமஜென்ம பூமி அறக்கட்டளை, ஊழல் செய்து இந்தியர்களை ஏமாற்றிவிட்டது' என குற்றம் சாட்டப்பட்டது. லக்னோவிலுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் முன்பு காங்கிரஸின் மகளிர் பிரிவினர் நேற்று முன்தினம் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சார்பில் நேற்று விரிவான அறிக்கைவெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாக ஒப்பந்தம் இடப்பட்ட பத்திரங்களின் நகல்களும் வெளியிடப்பட்டன

இதன்படி, அயோத்தி நகர ரயில் நிலையம் அருகிலுள்ள பிஜேஷ்வர் தோப்பில் 1.208 ஹெக்டேர் நிலம் குசும் பாதக், அவரது கணவர்ஹரீஷ் பாதக் உள்ளிட்ட சிலரின்பெயரில் இருந்துள்ளது. இது,2011-ம் ஆண்டு முதல் அயோத்திவாசிகள் சிலரால் அடுத்தடுத்து விலை பேசி ஒப்பந்தம் இடப்பட்டு, விற்பனையாகாமலேயே ரத்தாகி வந்துள்ளது.

இதில் ஒருவரான ஜான் முகம்மது மட்டும் தனது ஒப்பந்தத்தை முறைப்படி பதிவு செய்யாவிட்டாலும், ரத்து செய்யாமல் தொடர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை அவரது மகனான இர்பான் அன்சாரி 2017-ல் மீண்டும் புதுப்பித்துள்ளார்.

பேசி முடித்த சுல்தான் அன்சாரி

அந்த நிலத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. கடைசியாக, இர்பானின் மகனான சுல்தான் அன்சாரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நவம்பர் 9, 2019-ல் வருவதற்கு முன்பாக செப்டம்பர் 17, 2019-ல் ரூ.2 கோடிக்குவிலை பேசியுள்ளார். இதற்காக ரூ.50 லட்சம் முன்பணம் அளித்து பத்திரங்களில் ஒப்பந்தமும் இட்டுள்ளார். இந்த பத்திர ஒப்பந்தம் 2017 மற்றும் 2019 -ல்சுல்தானின் தந்தை மற்றும் தாத்தாவின் ஒப்பந்த நீட்டிப்பாக இருந்துள்ளது. இதன் மீதித் தொகையான ரூ.1.5 கோடியை மூன்றுஆண்டுக்குள், 2022 செப்டம்பருக்குள் அளிப்பதாக குறிப்பிடப்பட்டது.

இதில் சுல்தானுடன், ரவி மோகன் திவாரி உள்ளிட்ட சிலரும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில்தான் ராமர் கோயில் கட்டுவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து ராமஜென்ம பூமியை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதன் அறக்கட்டளை நிர்வாகிகள் கூடுதலான நிலங்களை வாங்கும் பணியில் இறங்கினர். அதில் ஒன்றாக குசும் பாதக்கின் நிலமும் இருந்தது. ஆனால், ராமர் கோயிலுக்கு சாதகமான தீர்ப்பும் வெளியாகிவிட்டதால் அயோத்தி நிலங்களின் விலை பன்மடங்காக உயர்ந்துவிட்டது. குறிப்பிட்ட இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் விலை பேசி முடித்துள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் அடுத்த சில நிமிடங்களில் கையெழுத்தானது. இச்சூழலில்தான் நில பேரம் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சுல்தான் அன்சாரி கூறும்போது, ‘அரசியல் கட்சியினர் கூறுவதுபோல் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தாமதித்தால் அந்த நிலம் வேறு எவருக்காவது மாறி, மேலும் விலை கூடும் வாய்ப்புகள் இருந்தன. ஏற்கெனவே எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததன் காரணமாக ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் ரூ.18.5 கோடி விலை பேசி ஒப்பந்தம் இட்டனர்.

அயோத்திவாசியான நானும் ராமரின் மீது மதிப்பு கொண்டவன் என்பதால் அவரது கோயிலுக்காக குறைந்த லாபத்தில் நிலத்தை விற்றுள்ளேன். இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும்’ எனத் தெரிவித்தார். அயோத்தியில் வெளியாகும் செய்திகளின்படி, குசும் பாதக் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான இந்த நிலம் இன்னும் விற்பனைக்கான பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலத்துக்காக சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி உள்ளிட்டோருக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் சார்பில் ரூ.17 கோடி வங்கி பரிவர்த்தனையில் அளிக்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை சில நாட்களில் அளித்து முறைப்படி பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x