மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா பாஜக எம்.பி.க்களுடன் ஆலோசனை

(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)
Updated on
1 min read

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் தனது அமைச் சரவையை மாற்றியமைக்க பிரதமர் விரும்புவதாகவும், இந்த மாற்றம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேபோல, அடுத்த ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தர பிரதேசத்திலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், தலைவர்களுடன் அமித் ஷா கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதேபோல, பிரதமர் மோடியும் கடந்த 5 நாட்களாக பாஜகஎம்.பி.க்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்றும் பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன்மூலம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 12, 13-ம் தேதிகளில் உ.பி.,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில எம்.பி.க்களைஅமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கரோனா 2-வது அலை காரணமாக பாஜக தலைவர்களின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது 2-வது அலை குறையத்தொடங்கியுள்ளதால் பாஜகஎம்.பி.க்களை கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவும், அமித் ஷாவும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையில் 28காலி இடங்கள் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.

தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால், எந்தெந்த மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர் தேர்வு செய்யப்படவில்லையோ, அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பிஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இம்முறை அந்தக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸில் இருந்து விலகிபாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அமைச்சர்பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in