

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊர் கடப்பா மாவட்டம் புலிவேந்துலா. இப்பகுதியில் ஒரு காலத்தில் ரகசியமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இது வெளிச்சத்துக்கு வரவே, பலரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, இத்தொழில் குறைந்து விட்டது. தற்போது புலிவேந்துலா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார்.
இந்நிலையில், புலிவேந்துலா மண்டலம், நல்லபுரெட்டி கிராமத்தில் நேற்று காலையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரசாத் ரெட்டி தனது கைத்துப்பாக்கியால், ஆளும்கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி ரெட்டியை 3 ரவுண்டு சுட்டார். இதில் பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அதே துப்பாக்கியால் பிரசாத் ரெட்டி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவரை அவரது உறவினர்கள் புலிவேந்துலா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாத் ரெட்டியும் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இந்த சம்பவங்களை பார்த்த மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.