Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

சிஏஏ-வுக்கு எதிரான வன்முறையை தூண்டியதாக கைதான ஜேஎன்யு மாணவிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவிகள் 2 பேர் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைமத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டமானது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, வடக்கு டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவிகள் நடாஷா நர்வால், தேவகான கலீதா மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனால் ஓராண்டு காலமாக அவர்கள் சிறையில் இருந்தனர். அவர்களில் ஆசிப் இக்பால் தன்ஹா மட்டும் தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மூன்று மாணவர்கள் சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் அனுப் ஜெய்ராம் பம்பானி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

மக்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமையை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. போராட்டத்துக்கும், தீவிரவாத செயல்களுக்கும் இடையே ஒரு கோடு அளவுதான் வித்தியாசம் இருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவர்களை அடக்க நினைக்கும் மத்திய அரசின் முனைப்பை பார்க்கும்போது, அதன் மனதில் இருந்து அந்தக் கோடு மெல்ல மெல்ல மறைந்து வருவதாகவே கருத முடிகிறது. அரசின் இந்தஎண்ணத்துக்கு வலு சேர்க்கப்பட்டால் அதுதான் ஜனநாயகத்தின் கருப்பு நாள் ஆகும்.

யுஏபிஏ என்பது தீவிரவாத செயல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். ஒருவர் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே அவர் மீது இந்த சட்டம் பாய வேண்டும். சாதாரண குற்றச் செயல்களுக்கு எல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியாகஇருக்காது. எனவே, அவர்கள் தலா ரூ.50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்திவிட்டு ஜாமீனில்செல்ல நீதிமன்றம் அனுமதிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x