

இந்தியாவில் சீர்கேடான நிலையில்உள்ள 2.6 கோடி ஹெக்டேர் நிலங்கள் வரும் 2030-ம் ஆண்டுக்குள் மீட்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.நா. பொதுசபைக் கூட்டம்காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பூமிபாலைவனமாக மாறுவதை தடுப்பதற்கான 14-வது ஐ.நா. மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இம்மாநாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
மனிதர்களுக்கும், பூமிக்கும் நீர்பரப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நிலப்பரப்பும் முக்கியமானது. ஆனால், நீர்நிலைகளின் பாதுகாப்புக்கு நாம்அளிக்கும் முக்கியத்துவம், பெரும்பாலும் நிலங்களுக்கு அளிப்பதில்லை. இந்தப் போக்கு மாற வேண்டும். சுற்றுச்சூழலின் ஸ்திரத்தன்மைக்கும், பூமி வெப்பமயமாதலை சமநிலைப்படுத்துவதற்கும் வனங்கள் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய சூழலில், வளர்ச்சி என்ற பெயரில் நிலங்களும், அதன் வளங்களும் சுரண்டப்படுகின்றன. இதனால் அந்த நிலங்கள் சீர்கேடு அடைந்து நாளடைவில் பாலைவனங்களாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. நிலம் சீர்கேடு அடைவதுதான் நாம் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால் ஆகும். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உழைத்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் 4-இல் ஒரு பங்கு நிலப்பரப்பு வனப்பகுதிகளாக மாறியுள்ளது. எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள 2.6 கோடி ஹெக்டேர் சீர்கேடு அடைந்துள்ள நிலங்களை மீட்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இலக்கை இந்தியா அடையும்பட்சத்தில், 3 பில்லியன் டன் அளவிலான கரியமில வாயுவின் வெளியேற்றத்தை சமன் செய்ய முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.