

மத்திய அரசின் சார்பில் யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
லட்சத் தீவை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், "படேலின் நடவடிக்கைகளால் லட்சத்தீவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு அவரை, உயிரி ஆயுதமாக பயன்படுத்தி வருகி றது" என்று குற்றம் சாட்டினார். இதன்பேரில் ஆயிஷா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரி வரை லட்சத்தீவில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று கிடையாது. புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலின் தவறான நடவடிக்கைகளால் தீவில் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உயிரி ஆயுதம் என்ற கருத்தை முன்வைத்தேன்.
அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு தேசவிரோத வழக்கு பதிவு செய்வது தவறு. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சர்ச்சை பெரிதானதால் சமூக வலைதளத்தில் விளக்கமும் வருத்தமும் தெரிவித்தேன். என் மீது சட்டத்துக்கு புறம்பாக தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.