பிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல்? - சிராக் பாஸ்வானுக்கு கடும் நெருக்கடி

பிஹாரில் திடீர் திருப்பம்; அமைச்சர் பதவி வரும் போது எம்.பி.க்கள் கட்சித் தாவல்? - சிராக் பாஸ்வானுக்கு கடும் நெருக்கடி
Updated on
2 min read

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ள சூழலில் அவரது கட்சி எம்.பி.க்கள் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பிஹார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.

பிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.

எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அக்கட்சி எம்.பி.க்கள் பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ் ராஜ் சிராக் பாஸ்வானின் உறவினர்கள் ஆவர்.

அவர்கள் 5 பேரும் அண்மையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் பசுபதி குமார் பராஸ் வீட்டிற்கு சிராக் பாஸ்வான் இன்று சென்று பேசினார். பசுபதி குமாரை சிராக் பாஸ்வான் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

பசுபதி குமார் பராஸ்
பசுபதி குமார் பராஸ்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பசுபதி குமார் தான் லோக் ஜனசக்தி கட்சியிலேயே இருப்பேன் எனக் கூறினார்.

சிராக் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ள சூழலில் அவரது கட்சி எம்.பி.க்கள் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு தாவுவதாக கூறப்படுவது பிஹார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in