என்ஐசி இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்

என்ஐசி இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் நடைபெறவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏர் இந்தியா, பிக் பேஸ்கட் மற்றும் டொமினோஸ் போன்ற அமைப்புகளில் கம்ப்யூட்டர் தரவுகளில் நடந்த அத்துமீறல்கள் , தேசிய தகவல் மையம் (NIC) நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில்கள் மற்றும் கடவுச்சொற்களை(password), கம்ப்யூட்டர் ஊடுருவல்காரர்களுக்கு தெரிவித்து விட்டதாக ஊடகம் ஒன்றில் தகவல் வெளியானது.

இது குறித்து மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த விளக்கத்தில் கூறியதாவது:

என்ஐசி நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் எந்த கம்ப்யூட்டர் அத்துமீறலும் நடைபெறவில்லை. மத்திய அரசின் இ-மெயில் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது.

அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துபவர்கள் வெளிப்புற இணையதளங்களில், அரசு இ-மெயில் முகவரியை பதிவு செய்து அதே கடவுச் சொல்லை பயன்படுத்தியிருந்தால் தவிர, மற்ற இணையதளங்களில் நடைபெறும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு அத்துமீறல்கள், அரசு இ-மெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

என்ஐசி இமெயில் அமைப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) மற்றும் 90 நாட்களுக்கு ஒரு முறை கடவுச் சொல்லை மாற்றும் வசதி ஆகியவை உள்ளன.

மேலும், என்ஐசி இமெயிலில் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் என்றால், செல்போன் ஓடிபி அவசியம். இந்த ஓடிபி தவறாக இருந்தால், கடவுச் சொல்லை மாற்ற முடியாது. மத்திய அரசின் என்ஐசி இ-மெயில்களை பயன்படுத்தி தகவல்களை திருடும் எந்த முயற்சியையும் தேசிய தகவல் மையத்தால் குறைக்க முடியும்.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு நெறிமுறிகள் குறித்தும், ஊடுருவல் அபாயம் குறித்தும் அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துவோருக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை என்ஐசி அவ்வப்போது மேற்கொள்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in