தேவஸ்தான வாரியத்தை கலைக்கக் கோரி கேதார்நாத் கோயில் அர்ச்சகர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

தேவஸ்தான வாரியத்தை கலைக்கக் கோரி கேதார்நாத் கோயில் அர்ச்சகர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்
Updated on
1 min read

கேதார்நாத் கோயில் தேவஸ்தான மேலாண்மை வாரியத்தை கலைக்கக் கோரி அக்கோயிலின் அர்ச்சகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்திரி ஆகிய 4 கோயில்கள் இந்துக்களின் புனிதத் தலங்கள் ஆகும்.இவை சார் தாம் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கோடைகாலத்தில், இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கும் யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.

இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை உத்தராகண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியம் ஒருங்கிணைத்து மேற்கொள்கிறது. இந்நிலையில், உத்தராகண்ட் சார் தாம் தேவஸ்தான வாரியத்தை கலைக்க வேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் கோரிவருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கேதார்நாத் கோயில் முன்பு அமைதியான முறையில் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி, கோயில் முன்பு அவர்கள் அமர்ந்துள்ளனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில், கோயில் தேவஸ்தான வாரியத்தைக் கலைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கேதார்நாத் கோயில் அர்ச்சகர் புரோஹித் சமாஜ் நேற்று கூறும்போது, “வாரியத்தைக் கலைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இந்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது முதல் எங்களது உரிமைகள் பறிபோய்விட்டன.

இதுதொடர்பாக முதல்வர் தீரத் சிங் ராவத்திடம் கோரிக்கை வைத்தபோது, வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதாக வாக்களித்தார். ஆனால் தற்போது வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்குப் பதிலாக வாரியம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. வாரியத்தைக் கலைக்காவிட்டால் எங்களது போராட்ம் தொடரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in