

இந்தியாவில் இதுவரை 25.31 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் 20 கோடி பேருக்குமுதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம்தேதி கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஏப்ரலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிபோடும் பணி தொடங்கியது. கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சத்து 84,239 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதுவரை 25 கோடியே 31 லட்சத்து95,048 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.
இதில் 20.46 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்களில் ஒரு கோடி பேருக்கு முதல் தவணையும் 69 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
முன்கள பணியாளர்களில் 1.67 கோடி பேருக்கு முதல் தவணையும், 88 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்டோரில் 6.24 கோடி பேருக்கு முதல் தவணை, 1.98 கோடிபேருக்கு 2-ம் தவணை, 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரில் 7.53 கோடி பேருக்கு முதல் தவணை, 1.19 கோடி பேருக்கு 2-ம் தவணை, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோரில் 4 கோடி பேருக்கு முதல் தவணை, 6.74 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடி பேருக்கு முதல் தவணையும், 51 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 1.91 கோடி பேருக்கு முதல் தவணையும் 37 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
அதிக தடுப்பூசிகளை பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
மாநிலங்களுக்கு தடுப்பூசி
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 84,350 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கையிருப்பில் சுமார் 1 கோடியே53 லட்சத்து 79,233 தடுப்பூசிகள்உள்ளன.
அடுத்த சில நாட்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 லட்சத்து 48,760 தடுப்பூசிகள் வழங்கப்படஉள்ளன.
இவ்வாறு சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.