

கரோனா காரணமாக ஊரடங் கால் ஏராளமான தொழிலாளர் கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே மும்ப்ரா பகுதியில் மழைக் காலத்தில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க சாக்கடை சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் அந்தப் பணிக்காக ஆட்களை பணிக்கு சேர்த்துள்ளார்.
இதில், தாணே மாவட்டத்தின் திவா பகுதியைச் சேர்ந்த 20 பட்டதாரிகளை சாக்கடை சுத்தம் செய்ய நியமித்துள்ளார். எனினும், இந்தப் பணியை அவர்கள் தாழ் வாக கருதவில்லை. இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ள சமீர் என்பவர் கூறுகையில், ‘‘இந்த ஒப்பந்ததாரரின் கீழ் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் 3 மாதமாக ஈடுபட்டுள்ளேன். கரோனாவால் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குடும்பத்தை காப்பாற்ற வேலை அவசியம்’’ என்றார்.
மற்றொரு இளைஞர் அனில் என்பவர் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியர். ‘நாங்கள் வாங்கிய பட்டங்கள் இப்போது எங்களுக்கு உதவவில்லை’ என்கிறார்.
சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும் மும்ப்ரா வார்டு கவுன்சிலர் கூறுகையில், ‘‘கரோனாவால் வேலை இழந்த இந்த பட்டதாரிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அதேநேரம், எந்த வேலையையும் தாழ்வாக நினைக்காமல் சாக்கடையை சுத்தம் செய்யும் அவர்களை வணங்குகிறேன்’’ என்றார்.