தலித் இலக்கிய ஆளுமை, கன்னட கவிஞர் சித்தலிங்கையா மறைவு: முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம்  

தலித் இலக்கிய ஆளுமை, கன்னட கவிஞர் சித்தலிங்கையா மறைவு: முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம்  
Updated on
2 min read

தலித் இலக்கிய ஆளுமையும் இயக்க முன்னோடியுமான கன்னட கவிஞர் சித்தலிங்கையா (67) கரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட கவிஞர் சித்தலிங்கையா தேசிய அளவில் தலித் இலக்கியத்திலும், இயக்க செயல்பாட்டிலும் முன்னோடியாக விளங்கியவர். அவர் பெங்களூருவை அடுத்துள்ள மஞ்சனபெலே கிராமத்தில் 1953ம் ஆண்டு பிறந்தவ‌ர். பள்ளிப் பருவத்திலே கவிதை எழுத தொடங்கிய இவர், 1970களில் பெங்களூரு பல்கலை கழகத்தில் படிக்கும் போது 'ஹொலய மாதிகரு ஹாடு' (பட்டியல் வகுப்பினரின் பாடல்) என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டார்.

தலித் மக்களின் வலியையும், விடுதலை உணர்வையும் வெளிப்படுத்தும் வகையிலான அந்த பாடல்கள் கன்னட இலக்கிய உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. சித்தலிங்கையாவின் பாடல்கள் மக்கள் இயக்க மேடைகளில் விடுதலை கீதங்களாக ஒலித்ததால் தலித் அரசியல் வேர்ப்பிடிக்க தொடங்கியது.

தலித் உரிமையை எழுதியதுடன் நில்லாமல் சித்தலிங்கையா 1974ல் எழுத்தாளர் தேவனூரு மகாதேவ, பேராசிரியர் கிருஷ்ணப்பா உள்ளிட்டோருடன் இணைந்து 'தலித் சங்கர்ஷ சமிதி' என்ற அமைப்பையும் தொடங்கினார். இதைத் தொடர்ந்தே மகாராஷ்டிரா,கர்நாடகாவை கடந்து நாடு முழுவதும் தலித் அரசியல் உணர்வு மேலெழ‌ தொடங்கியது.

'ஹொலய மாதிகரு ஹாடு' (பட்டியல் வகுப்பினரின் பாடல்), சாவிர நதிகளு (ஆயிரம் நதிகள்) உட்பட 10க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ள சித்தலிங்கையா, நாடகங்கள், விமர்சன கட்டுரைகள்,பயண நூல்களையும் எழுதியுள்ளார். இவரது சுயசரிதையான 'ஊரும் சேரியும்' தமிழ் இலக்கிய வட்டாரத்திலும் பரவலான கவனிப்பை பெற்றது.

சித்தலிங்கையாவின் இலக்கிய‌ பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கன்னட இலக்கிய உலகில் உயரிய விருதான பம்பா விருது வழங்கப்பட்டுள்ளது. கன்னட ராஜ்யோத்சவா விருது, நடோஜ விருது உள்ளிட்டவற்றை உரிய விருதுகளை பெற்றுள்ள இவர் 2015ல் நடந்த உலக கன்னட மாநாட்டின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2 முறை சட்டமேலவை உறுப்பினராக இருந்துள்ள சித்தலிங்கையா, கர்நாடகாவில் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உள்ள கன்னட வளர்ச்சித் துறை தலைவராகவும் இருந்துள்ளார்.

பெங்களூரு பல்கலை கழகத்தில் கன்னட பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மனைவி, மகன், மகளுடன் ராஜராஜேஸ்வரி நகரில் வசித்தார்.

கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றுக்கு ஆளான சித்தலிங்கையா அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை சித்தலிங்கையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட இலக்கிய வட்டாரத்திலும், தலித் இயக்க வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் இரங்கல்

சித்தலிங்கையாவின் ம‌றைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோரும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, துணை முதல்வர் அஷ்வத் நாராயண், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பா, தலித் சங்கர்ஷ சமிதி தலைவர் மாவள்ளி சந்திரசேகர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பவுத்த முறைப்படி நேற்று மாலை பெங்களூருவில் உள்ள கலா கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சித்தலிங்கையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கின் போது ஏராளமான இலக்கியவாதிகளும், தலித் அமைப்பினரும் ஜெய்பீம் முழக்கத்துடன் சித்தலிங்கையாவின் பாடல்களை பாடியது உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in