Last Updated : 13 Jun, 2021 03:11 AM

 

Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM

இந்தியாவுக்கு தேவை பொறுப்பான, நம்பகமான தன்னாட்சி நிறுவனங்கள்

கடந்த 2 மாதங்களாக நடந்தநிகழ்வுகள் மிகவும் துன்பகரமானவை, வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமானவை. அது நடக்கவில்லை என்று பாசாங்கு செய்வதே ஒரே பகுத்தறிவான பதிலாகநமக்கு இருக்க முடியும். மிகவும் மோசமான கரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவின் மென்மையான அடித்தளத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நமது அதிகாரத்துவ அமைப்பு, இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் அளவுக்கு வேகமானதாக இல்லை என்பதே உண்மை.

கரோனா வைரஸ் ஒரு நாள் உலகிலிருந்து காணாமல் போய்விடும். ஆனால் குடிமக்களின் அன்றாட துயரம், மோசமான அதிகாரத்துவ நிறுவனங்களைச் சமாளிக்க பொதுமக்கள் முயற்சிப்பது அப்படியேதான் இருக்கும். ‘அதிகபட்ச ஆளுகை, குறைந்தபட்ச அரசாங்கம்' என்ற தாரக மந்திரம் மூலம் இந்தியாவை மாற்றலாம் என நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு உறுதியளித்தார்.

ஆனால் அதை இதுவரை அவர் செய்யவில்லை. ஆனால், இப்போது, கரோனா வைரஸ் 2-வது அலையை நிர்வகிப்பதில் அரசு கட்டமைப்புகள், நிறுவனங்கள் தோல்வியைக் கண்டுள்ளன. ஆனால் இப்போதும் தாமதம் ஏற்படவில்லை; 2024-ம் ஆண்டுக்கு முன்னர் பிரதமர் அதைச் செய்து விடலாம்.

கரோனா வைரஸ் 2-வது அலைக்குமுன்னதாக, மத்திய நிதி அமைச்சர் உத்வேகம் தரும் மத்திய பட்ஜெட்டை அளிக்கவிருப்பதாக அறிவித்தார். அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனங்களை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக இந்த பட்ஜெட் இருக்கும் என்று அவர் அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைப் பின்பற்றினார். கரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சிறந்த பாதை உள்கட்டமைப்பு முதலீடு என்பதை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவருமே அங்கீகரித்தனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் உள்கட்டமைப்பு செலவினங்கள்விஷயத்தில் இந்திய அரசு முழுமையாககளமிறங்கவில்லை. இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், இந்தியாவின் அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. அந்தத் துறைகள் வன்பொருளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதில் எதிர்மறை விஷயங்களும் உருவாகின்றன.

இந்தியாவுக்கு தன்னாட்சி, பொறுப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையுள்ள நவீன, திறமையான செயல்பாடுகளைத் தரும் நிறுவனங்கள் தேவை.

வெற்றிகரமான நாடுகள் இத்தகைய திறனுள்ள நிறுவனங்களை உருவாக்கியுள்ளன. இதேபோன்ற சிறந்த எடுத்துக்காட்டுகளை இந்தியாவிலும் காட்டமுடியும். நகர்ப்புற போக்குவரத்தில் டெல்லியின் மிகச்சிறந்த மெட்ரோ ரயில் வசதி உள்ளது; எல்இடிவிளக்குகள் மூலம் தேசத்தை மாற்றுவதில் ஆற்றல் திறன் சேவைகள் (இஇஎஸ்எல்) உருவாக்கப்பட்டுள்ளன; டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் சிறந்த மின்சார நிறுவனங்கள்; மேலும், நீர் மற்றும் சுகாதாரத்துக்காக ஷிம்லாவில் ஜல் பிரபந்தன் நிகாம் நிறுவனம் (எஸ்ஜேபிஎன்எல்) அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நாட்டின் மிகச் சிறந்த செயல்பாடுள்ள நிறுவனங்களாகும்.

இதில் ஷிம்லாவின் கதை அனைவரையும் வியக்க வைக்கிறது. ஷிம்லாவும், மற்ற இந்திய நகரங்களைப் போலவே குடிநீர், சுகாதாரப் பிரச்சினையில் சிக்கியதாகும். ஷிம்லா நகரில் நீங்கள்குளியலறையில் இருந்தீர்கள் என்றால்குழாயில் திடீரென தண்ணீர் நின்றுவிடும். தண்ணீரைப் பெறுவதற்கு டேங்கர் லாரியை நீங்கள் அழைக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில்அந்த தண்ணீர் டேங்கர் லாரி வரத் தாமதமாகும்.

2018-ம் ஆண்டு கோடைகாலத்தின்போது ஷிம்லா நகரில் துயரங்கள் உச்சத்தை எட்டின. அப்போது அந்தப் பகுதி மக்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைத்தது. அப்போது அங்கு தொற்றுநோய் பரவி, நகரில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் நகரை விட்டே ஓடிவிட்டனர். ஓட்டல்கள் மூடப்பட்டு வியாபாரம் படுத்தது. அப்போது அதை ஒரு பேய் நகரம் போல் உணர்ந்தேன்.

ஆனால், அப்போது ஷிம்லா நகராட்சி, திறமையுடன் செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டது. தண்ணீர் மற்றும் கழிவுநீர் இரண்டையும் நிர்வகிக்க எஸ்ஜேபிஎன்எல் என்ற தன்னாட்சி கொண்ட பயன்பாட்டு நிறுவனத்தை ஷிம்லா நகராட்சி அமைத்தது. நகராட்சியின் பல்வேறு பணிகள் எஸ்ஜேபிஎன்எல்-லுக்கு வந்தன. அரசியல் குறுக்கீடு இல்லாமல் செயல்பட எஸ்ஜேபிஎன்எல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு (சிஇஓ) சுதந்திரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு உடைந்த, கசிவு குழாய்கள் சரி செய்யப்பட்டன. பள்ளத்தாக்குகளிலிருந்து நீரேற்றம்செய்வதற்காக புதிய பம்புகள் வாங்கப்பட்டன; தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிக்க மீட்டர்கள் நிறுவப்பட்டன. ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டது.

விரைவில், ஷிம்லா நம்பமுடியாத வெற்றியை அடைந்தது. சோதனை செய்யப்பட்ட 3 வார்டுகளிலும் 24 மணி நேரத்துக்கும் தொடர்ச்சியான தண்ணீரை வழங்குவதோடு, நகரத்தின் பிற பகுதிகளிலும் அதிக நீர் விநியோகத்தைச் செய்தது. சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் திரும்பவும் நகருக்குள் ஓடி வந்தனர். ஷிம்லா நகரம் ‘மிகவும் வாழக்கூடிய சிறிய நகரங்கள்’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியாவுக்கு அதன் உள்கட்டமைப்பை நிர்வகிக்க ஷிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் போன்ற நிறுவனங்கள் தேவை. மின்சாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல துறைகளுக்கும் இதுபோன்ற நிறுவனங்கள் தேவை. இந்த நிறுவனங்கள் பொதுத்துறைக்குச் சொந்தமானவையா அல்லது தனியாருக்கு சொந்தமானவையா அல்லது பொது-தனியார் கூட்டு முயற்சியில் உருவானதா என்பது ஒரு பொருட்டல்ல. இதில் அரசியல்வாதிகள், அதிகாரத்துவ வர்க்கத்தினர் தலையிடுவதற்கு எதிராக நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பிரதமரின் மந்திரம் எதுவாக இருக்க வேண்டும் என்றால் ‘குழாய்களை சரிசெய்ய வேண்டாம்; குழாய்களை சரிசெய்யும் நிறுவனங்களை சரிசெய்ய வேண்டும்’ என்பதே.

அத்தகைய நிறுவன சீர்திருத்தத்துக்கு ஏற்றதாக உள்கட்டமைப்பை பெருமளவில் நிபந்தனைக்கு உட்பட்டதாக மத்திய நிதியமைச்சர் மாற்ற வேண்டும்.

இந்த சீர்திருத்தத்தில் யாருக்கு இழப்பு ஏற்படும்? அதிகாரத்துவவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுக்கே இழப்பு.

அதிர்ஷ்டவசமாக, சீர்திருத்தவாதியின் பக்கத்தில் மக்கள் நிற்பார்கள். 24 மணி நேரமும் தண்ணீர் சேவை, 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு இந்தியாவில் சாத்தியமாகும்.

சமீபத்திய விவசாய சீர்திருத்தங்களின் மூலம் கிடைத்த படிப்பினை என்னவென்றால், நீங்கள் மக்களை ஜனநாயகத்தின் வழியில் கொண்டு செல்ல வேண்டும். எனவே, பொலிவுறு சீர்திருத்தவாதியானவர் தனது சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முன்பு அவற்றை மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். இறுதியாக, இந்த கொடூரமான கரோனா வைரஸ் நெருக்கடியில் சீர்திருத்தம் செய்யப்படுவது சரியாக இருக்குமா என்று தோன்றலாம். ஆனால் சீர்திருத்தங்கள் பொதுவாக ஒரு நெருக்கடியில்தான் நிகழ்கின்றன. எனவே, பிரதமரே இந்த நெருக்கடியை வீணாக்காதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x