பிஹாரில் அணி மாறுகிறாரா ஜிதன்ராம் மாஞ்சி?- லாலுவுடன் போனிலும் அவரது மகனுடன் நேரிலும் பேசியதால் சர்ச்சை

ஜிதன்ராம் மாஞ்சி
ஜிதன்ராம் மாஞ்சி
Updated on
1 min read

பிஹாரின் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி, லாலு தலைமை யிலான மெகா கூட்டணியில் இருந்தவர். இவர், கடந்த வருடம் சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்பாக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏவிற்கு மாறினார். மாஞ்சியுடன் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்ஸான் கட்சியும்(விஐபி) சென்றது. இரு கட்சிகளுக்கும் தலா 4 எம்எல்ஏக்கள் இருப்பதால் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக ஜிதன் ராம் மாஞ்சிக்கு பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகி வருகிறது. கரோனா தடுப்பூசி மருந்துகளின் மீது பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டதை முதல் தலைவராக மாஞ்சி எதிர்த்தார். பிறகு சில நாட்களுக்கு பின்னர் பிஹாரின் பாங்காவிலுள்ள மதரஸாவில் ஒரு குண்டு வெடித்தது. இதற்கு பாஜக தலைவர்கள் மதரஸாக்களில் தேசவிரோத நடவடிக்கைகள் வளர்வதாக குற்றம் சுமத்தினர். இதையும் எதிர்த்த மாஞ்சி சில சம்பவங்களை வைத்து குறிப்பிட்ட மதத்தினரை குறை கூறக் கூடாது என்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாட்னாவில் மாஞ்சி யின் அரசு குடியிருப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வந்திருந்தார். அதே சாலையில் குடியிருப்பவருடன் சுமார் அரை மணி நேரம் மாஞ்சி பேசியுள்ளார். பிறகு அவரது போனில் டெல்லியிலுள்ள லாலுவுடனும் 12 நிமிடங்கள் பேசியுள்ளார் மாஞ்சி.

இவரது வீட்டை விட்டு வெளியில் வந்த தேஜ் பிரதாப், விரைவில் மாஞ்சி தம் கூட்டணிக்கு திரும்புவார் எனக் கூறினார். இதுகுறித்து பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் பாஜக எம்.பி.யுமான சுசில்குமார் மோடி கூறும்போது, ‘பொது வாழ்க்கையில் இருப்பவர்களை சந்திப்பதில் அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. பிஹாரின் முக்கிய தலித் தலைவராக மாஞ்சி உள்ளார். என்டிஏ தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யும். ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துகள் நிலவுவது இயற்கை’ எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் முடிவில் 15 எம்எல்ஏக்கள் வித்தியாசத்தில் மெகா கூட்டணியின் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது முதல் என்டிஏவின் உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதில் லாலு ஈடுபட்டு வருகிறார். கால்நடை தீவன வழக்கில்நான்கரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் லாலுவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. தற்போது மகள் மிசா பாரதியின் வீட்டில் லாலு தங்கியுள்ளார். அங்கிருந்தபடி பிஹாரில் ஆட்சி அமைக்க முயன்று வருகிறார் லாலு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in