

கொல்கத்தா ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமிசிவமயானந்தாஜி காலமானார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் உள்ளது. கடந்த 2017 முதல் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண இயக்கத்தின் துணைத் தலைவராக சுவாமி சிவமயானந்தாஜி சேவையாற்றி வந்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மே 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அவர் காலமானார். கரோனா விதிகளின்படி அவரது இறுதிச் சடங்கு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. அவரது அஸ்தி கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.
பிஹாரை சேர்ந்த சுவாமி சிவமயானந்தாஜி கடந்த 1934-ம்ஆண்டு பிறந்தவர். இவர் பேலூர் மடத்தில் இணைந்தார். தனது வாழ்நாள் முழுவதும் ராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரது மறைவு மடத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று பேலூர் மடம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ராமகிருஷ்ண மடத்தின் சமுதாய சேவைகளில் சுவாமி சிவமயானந்தாஜி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கலை,ஆன்மிகத்துக்காக அரும்பணி யாற்றினார். அவரது மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.