

நாடாளுமன்றத்தில் பாஜக முத்த தலைவர் எல்.கே.அத்வானிக்குத் தனி அறை இல்லாமல் அவதிப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் இருந்து வந்த அறை திடீரென அவருக்கு இல்லாமல் போனதால் குழப்பம் அடைந்தார் அத்வானி.
இன்று மதிய இடைவேளையின் போது நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறைக்கு அத்வானி வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையின் கதவில் பொருத்தப்பட்டிருந்த அவரது பெயர் பொறிக்கப்பட்ட பலகை அகற்றப்பட்டிருந்தது.
ஆனால் இவருக்கு முன்பு இந்த அறையைப் பயன்படுத்திய வாஜ்பாயி பெயர்ப் பலகை அப்படியே இருந்துள்ளது. தனது பெயர்ப் பலகை அகற்றப்பட்டதையறிந்து குழம்பிய நிலையில் அத்வானி கடைசியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறையில் ஓய்வு எடுக்க நேரிட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தின் உள்ளே எந்த இடத்தில் அமர்வது என்ற குழப்பத்தில் வேறு அத்வானி இருந்துள்ளார்.
காலையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவுடன் வெங்கையா நாயுடுவுடன் 2வது வரிசையில் அமரச் சென்றார். ஆனால் நாயுடு அவரை முதல் வரிசைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். உடனே முதல் வரிசைக்குச் சென்றார் அத்வானி. அங்கேயே உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். மோடிக்கு அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்தும் அவர் அங்கு உட்காரவில்லை.
மதியம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வந்த அத்வானி இடம் தேடினார் கடைசியில் 8வது வரிசையில் சென்று அமர்ந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தனி அறை இல்லாததால் பாஜக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தை பெரிது படுத்த விரும்பாத பாஜக வட்டாரம் அவருக்கு விரைவில் தனி அறை ஒதுக்கப்படும் என்று கூறி நிறுத்திக்கொண்டது.