Last Updated : 07 Dec, 2015 09:56 AM

 

Published : 07 Dec 2015 09:56 AM
Last Updated : 07 Dec 2015 09:56 AM

நீதித்துறை சுதந்திரமாக செயல்படும்வரை யாரும் எதற்கும் அஞ்ச வேண்டாம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

இந்திய நீதித்துறை சுதந்திரமாக செயல்படும்வரை யாரும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய அரசமைப்பு சட்ட விதிகளை உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படும்வரை யாரும் எதற்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை.

சகிப்பின்மை விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அது அரசியல் விவகாரம். எனினும் உச்ச நீதிமன்றம் இருக்கும்வரை அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். யாரும் அச்சப்பட வேண்டாம். பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படும்.

நமது நாடு பல்வேறு மதங்களின் தாயகமாக விளங்குகிறது. பிற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களும் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். உதாரணமாக பார்சி இன மக்களை குறிப்பிடலாம். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பது அதிகம். பார்சி இனத்தை சேர்ந்த எப்.எஸ். நாரிமன் போன்றவர்கள் நீதித்துறைக்கு அளித்து வரும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத வழக்குகளில்கூட ஆதாரம், விசாரணை இன்றி யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படாது. தீவிரவாதிகள், அந்நியர்கள் என்றாலும்கூட அவர்களுக்குரிய அடிப்படை சட்ட உரிமைகள் வழங்கப்படும்.

பழங்காலம் தொட்டு சமுதாயத்தில் குற்றமும் ஓர் அங்கமாக உள்ளது. மனிதர்கள் வாழும்வரை குற்றங்களும் தொடரவே செய்யும்.

இந்து மதம், இஸ்லாம், பவுத்தம், சீக்கிய மதம் எதுவாக இருந்தாலும் எல்லா மதங்களும் நம்மை கடவுளை நோக்கியே வழிநடத்திச் செல்கின்றன. ஓர் இஸ்லாமிய அறிஞர், பகவத் கீதையை உருதில் மொழியாக்கம் செய்துள்ளார். எனவே மதங்களைத் தாண்டி சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x