

கோவிட்-19 நோயாளிகளுக்கு கால்சிகைன் மருந்தைப் பயன்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கும் சிஎஸ்ஐஆர்- இந்திய ரசாயன தொழில்நுட்பக்கழகம், ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்- இந்திய ஒருங்கிணைந்த மருந்துக் கழகம் ஆகியவை இந்த முக்கிய மருத்துவ சோதனையில் இணைந்துள்ளன.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் மற்றும் ஹைதராபாத்தின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியார் நிறுவனத்திற்கு, கோவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்சிகைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கீல்வாதம் மற்றும் அழற்சி சார்ந்த பிரச்சினைகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மாண்டே, தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான டாக்டர் ராம் விஷ்வகர்மா, இருதயம் சார்ந்த இணை நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் அவர்கள் விரைவாகக் குணமடைவார்கள் என்று கூறினார்.
கோவிட்-19 தொற்று ஏற்பட்டபோதும், அதற்குப் பிந்தைய காலக் கட்டத்திலும் இருதயம் சார்ந்த பிரச்சினைகளால் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாகப் பல்வேறு சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருப்பதால் புதிய மற்றும் மறுபயன்பாட்டு மருந்துகளைக் கண்டறிவது அவசியம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.