

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம்- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோன்மணி அகாலிதளம் அங்கம் வகித்து வந்தது. அகாலி தளம் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், பாஜகவும், அகாலி தளமும் நகமும் சதையும் போல என்று புகழாரம் சூட்டியிருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் பாஜக -அகாலி தளம் கூட்டணி அமைத்துச் சந்தித்தன.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக கூட்டணியிலிருந்து அகாலி தளம் விலகியது.
இந்தநிலையில் அடுத்தாண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வருமான அம்ரீந்தர் சிங் வலிமையான தலைவராக இருந்து வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அகாலி தளம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகாலிதளம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஸ் மிஸ்ரா அகாலி தளக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இவ்விரண்டு கட்சிகளின் கூட்டணியும் இன்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அகாலி தளக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமின்றி எதிர்வரும் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து அகாலி தளம் போட்டியிடும். பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் பகுஜன் 20 இடங்களிலும், அகாலி தளம் 97 இடங்களிலும் போட்டியிடும். காங்கிரஸ் அரசின் ஊழல், மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.