எல்லையில் ஊடுருவிய சீன உளவாளி கைது: 1,300 சிம் கார்டை சீனாவுக்கு அனுப்பியது கண்டுபிடிப்பு

எல்லையில் ஊடுருவிய சீன உளவாளி கைது: 1,300 சிம் கார்டை சீனாவுக்கு அனுப்பியது கண்டுபிடிப்பு
Updated on
1 min read

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவிய சீன உளவாளி கைது செய்யப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 1,300 சிம் கார்டுகளை அவர் சீனாவுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மத்தியில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன்பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவை சேர்ந்த 267 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து சீனாவை சேர்ந்த ஆன்லைன் கடன் செயலிகள் இந்தியா முழுவதும் வியாபித்து பரவியிருப்பது கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். சீன ஆன்லைன் நிறுவனங்களுக்காக ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த பின்னணியில் இந்திய-வங்கதேச எல்லையில் நேற்று முன்தினம் ஹன் ஜுன்வே (36) என்ற சீன இளைஞரை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். சீனாவின் ஹூபெய் பகுதியை சேர்ந்த அவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வங்கதேசத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊருடுவும்போது பிடிபட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீன உளவு நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் ஹன் ஜுன்வே, இந்தியாவுக்கு பலமுறை வந்து உளவு பார்த்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 1,300 சிம் கார்டுகளை வாங்கி சீனாவுக்கு அனுப்பியுள்ளார்.

அவரிடம் இருந்து லேப்டாப், 2 செல்போன்கள், பென் டிரைவ், ஏடிஎம் கார்டுகள், அமெரிக்க டாலர் ரூபாய் நோட்டுகள், இந்திய, வங்கதேச ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவரது நண்பரும் சீன உளவாளியுமான சன் ஜியாங்கை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அப்போது சன் ஜியாங் அளித்த வாக்குமூலத்தில், ஹன் ஜுன்வே குறித்தும் அவரது மனைவி குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் ஹன் ஜுன்வே மீது உத்தர பிரதேச போலீஸார் எற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் எல்லை பாதுகாப்புப் படையிடம் பிடிபட்டுள்ளார்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை டிஐஜி குலேரியா கூறும்போது, "ஏற்கெனவே 4முறை ஹன் ஜுன்வே இந்தியாவுக்கு வந்துள் ளார். டெல்லி அருகே குருகிராமில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் இந்தியாவில் எங்கெல்லாம் சென்றார். எந்த இடங்களை உளவு பார்த்தார். என்னென்ன சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in