

ஆதார், திவால் தொடர்பான சட்டங்களை நிறைவேற்ற அவற்றை நிதி மசோதாவாக தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “எவ்வளவு முடியுமோ அவ்வளவு சட்டங்களை நிதி மசோதாவாக கொண்டு வருவோம். திவால் சட்டத் துக்கும் இதே நடைமுறையைப் பின்பற்றுவோம்” என்றார்.
சாதாரண மசோதாக்கள் நிறை வேற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், நிதி மசோதாவைப் பொறுத்த வரையில், மக்களவைதான் அதிகாரம் மிக்கது.
நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மாநிலங்களவை பரிந்துரை மட்டுமே செய்யமுடியும். அதுவும் 14 நாட்கள் அவகாசத்துக்குள். அவகாசம் கடந்து விட்டால் மக்களவையில் எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டதோ அதே வடிவில் நிதி மசோதா நிறைவேற்றப்படும்.
எனவே, சில முக்கிய சட்டங்களை நிதி மசோதா வடிவில் தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆதார் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆதார் எண் வழங்கும் அமைப்பான இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சட்ட வலுவைப்பெறும்.அரசு திட்டங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, ஆதார் தொடர்பான சட்டம் இயற்றுவது தேவையாக உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஓய்வூதிய திட்டங்கள், வருங் கால வைப்பு நிதி திட்டம், ஜன்தன் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களுக்கும் விருப்புரிமை அடிப்படையில் மட்டுமே ஆதார் எண் கேட்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யுஐடிஏஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணியும், ஆதார் எண் தொடர்பான உறுதியற்ற நிலையை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
திவால் சட்டத்தைப் பொறுத்த வரை, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான வரைவு மசோதா முன்னாள் சட்டத் துறை செயலர் டி.கே. விஸ்வநாதன் தலைமையிலான குழுவால் தயாரிக் கப்பட்டுள்ளது. திவால் தொடர்பான வழக்குகளை 180 நாட்களுக்குள் தீர்வு காண இக்குழு பரிந்துரை செய்துள்ளது.