Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது. எனவேஅதை மேற்கு வங்க அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுதிட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர். பிஹார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தங்களின் ரேஷன் கார்டு விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், ஒரே நாடு-ஒரேரேஷன் கார்டு திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிஅப்போதைய முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை பயோமெட்ரிக் மூலம் எந்த மாநிலத்துக்கு இடம்பெயர்கிறாரோ அங்கு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்காக அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எந்தவித காரணமும் கூறாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அந்த அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்றும், எந்தவித காரணங்களையும் கூறாமல் மேற்கு வங்க அரசு இதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில்,உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x