Last Updated : 12 Jun, 2021 07:01 AM

 

Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் மூலம் ராணுவத்தை உளவு பார்த்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு: தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உட்பட 2 பேர் கைது

பெங்களூரு / புதுடெல்லி

இந்திய ராணுவத்தின் தென்னக படைப் பிரிவின் புலனாய்வு குழுவும், கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு பிரிவும் இணைந்து சட்ட விரோத தொலைபேசி பரிமாற்றத்தை கடந்த சில மாதங்களாக கண்காணித்தன. அதில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்காக ராணுவம் தொடர்பான அழைப்புகளை உளவு பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் கூறுகையில், ‘‘கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி பி முகமதுகுட்டி (36), தமிழகத்தில் உள்ள திருப்பூரை சேர்ந்த கவுதம் பி.விஸ்வநாதன் (27) ஆகிய இருவரும் பெங்களூருவில் 6 சட்டவிரோத தொலைபேசி பரிமாற்ற மையங்களை நடத்துவதாக ராணுவ புலனாய்வு பிரிவினர் தகவல் கொடுத்த‌னர். இதையடுத்து கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், 960 சிம்கார்டுகளை பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை, உள்ளூர்அழைப்புகளாக பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

இதன் மூலம் தொலைத் தொடர்பு துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதுடன், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு இந்திய ராணுவத்தை உளவு பார்த்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்'' என்றார்.

இதுகுறித்து ராணுவத்தின் தென்னக படைப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சில வாரங்களுக்கு முன் கிழக்கு இந்தியாவில் உள்ள ராணுவ மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை இடை மறித்து ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்ததில், ​​பாகிஸ்தான் உளவாளி ஒருவர் ராணுவத்தின் மூத்த அதிகாரி போல நடித்து ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டார்.

இதுகுறித்து மேலும் விசாரித்த போது ராணுவ மைய கட்டுப்பாட்டு அலுவலகம் (எம்.சி.ஓ), பாதுகாப்பு முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகம் (பி.சி.டி.ஏ) போன்ற அமைப்புகளுக்கும் இதுபோன்று மர்ம நபர்கள் விபரங்களை திரட்டும் வகையில் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது.

இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்புஅங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் மூலம் தகவல்களை திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தானின் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) அழைப்பு கள் சாதாரண இந்திய செல்போன் அழைப்பாக மாற்றப்பட்டுள்ளன. நாட்டின் பிற பகுதிகளிலும் சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் நடைபெறுகின்றனவா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x